பிள்ளை வளர்ச்சிப் பருவங்களும் பெற்றோரும்
குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் விளக்கம் பெறவேண்டிய மிக முக்கியமான அம்சம்தான் ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவங்கள் பற்றி அறிந்து கொள்வதுடன் அதில் இடம்பெறும் விருத்திகள் தொடர்பாகவும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
அவ்வாறில்லாவிட்டால் முறையற்ற நடவடிக்கைகளை குழந்தை வளர்ப்பில் அறியாமல் கடைப்பிடித்து பிறழ்வான, சமூகத்திற்கு உதவாத, ஆரோக்கியமற்ற குழந்தைகளை விளைவாகப் பெறவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது போய்விடும். அந்தவகையில் ஒரு பிள்ளையின் பிறப்பிலிருந்து கட்டிளமைப்பருவம் வரை இடம்பெறும் மாற்றங்களையும் வித்தியாசங்களையும் அறிந்து கொள்வதானது , அப் பிள்ளையை முறையாக வளர்ப்பதற்கு உந்துதலளிக்கின்றது.
பிள்ளைகளின் பருவங்களை அறிந்து கொள்தல்:
1. குழந்தைப்பருவம்:
இப்பருவமானது பிறப்பிலிருந்து இரண்டு வயது வரையான காலப்பகுதியில் இடம்பெறும் மாற்றங்களை உள்ளடக்கும். இப்பருவத்தில் பிள்ளையானது முற்றுமுழுதாக தாயில் தங்கியிருக்கும். தாயுடன் பாதுகாப்பான நெருங்கிய உறவினைக் குழந்தை ஏற்படுத்தும். அத்தோடு புன்முறுவல் செய்தல், தவழ்தல், இருத்தல், எழும்புதல், நடத்தல், கதைத்தல், சத்தங்களுக்கு பிரதிபலிப்பைக் காட்டுதல் என்பனவற்றை கொண்டிருக்கும் பருவமாகும். இப்பருவத்தில் தாய்க்கும் சேய்க்குமிடையில் நெருக்கமான பிணைப்பும் பாசமும் உருவாகும். பிள்ளைகளின் உடல் இயக்கத் தொழிற்பாடுகள் மற்றும் சமூக தொழிற்பாடுகள் என்பவை வேகமாக வளர்ச்சியடையும் பருவமாக இப்பருவம் உள்ளது.
II. முன்பள்ளிப்பருவம்/ முன்பிள்ளைப் பருவம்:
இப்பருவமானது மூன்று வயது தொடக்கம் ஐந்து வயது வரையான காலப்பகுதியில் இடம்பெறும் மாற்றங்களைக் கொண்டிருக்கும் பருவமாகும்.
இப்பருவத்தில் பிள்ளை தன்னைச் சுற்றிய உலகத்திற்குப் பழக்கப்பட்டு மற்றவர்களுடனும் பொருட்களுடனும் அறிமுகமாகி புதிய முறைகளில் விளையாடும். தமது தொடர்பாடலுக்குத் தேவையான மொழியையும் சொற்கள் மற்றும் குறியீடுகளையும் புரிந்துகொள்வர். இக்காலப்பகுதியில் பிள்ளைகளின் புத்திக்கூர்மையானது அதிகரித்துச் செல்கின்றது. சூழலிலுள்ள பல்வேறு விடயங்களை கேள்விகளைத் தொடுப்பதன் மூலமாக அறிந்து கொள்ள முனைவர்.ஒரு குடும்பத்திலுள்ளவர்களுடன் அறிமுகமாகி வாழ்வதற்கு முயற்சிப்பர். மனச்சாட்சி விருத்தியடைந்து ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் நிலைக்கு இப்பராயத்தினர் செல்வர். தனது அடையாளத்தை புரிந்து கொள்வதுடன் பிடிவாதக் குணம் மேலோங்கியும் காணப்படுவர்.
III. பள்ளிப்பருவம்/ பிள்ளைப்பருவம்:
இப்பருவத்தினர்கள் ஆறு வயது தொடக்கம் பன்னிரண்டு வயது வரை உள்ளவர்களைக் குறிக்கும். இந்தப்பருவத்திலேதான் முக்கிய விருத்திப்படிகள் நிகழ்கின்றன. உலகு பற்றிய எண்ணக்கருவானது பாரியளவில் விருத்தியடைகின்றது. தம்மைச் சூழவுள்ள ஒத்த வயதினருடனும் வயது வந்தவர்களுடனும் உறவாடக் கற்றுக் கொள்கின்றனர். இப்பருவத்தில் ஆசிரியர்களின் தாக்கமானது ஆதிக்கம் செலுத்தும். பாடசாலைக் கற்றலின் மூலம் தங்களை வளப்படுத்திக் கொள்ளவும் முயற்சிப்பர்.
சமூக நடத்தைகள் மற்றும் விழுமியங்களைப் பற்றிய எண்ணக்கருவினை வளர்த்துக் கொள்வார்கள். மனச்சாட்சி மற்றும் ஆள்மன உருவாக்கத்தின் மூலம் நெருக்கடிகளை உடனடியாகக் கையாளும் பாதுகாப்புக் கவசங்களை ஏற்படுத்திக் கொள்வர். தேவையற்ற பயங்கள் இப்பருவத்தினரை ஆட்கொள்ளும். தங்களை ஒத்த வயதினருடன் முரண்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வர்.
IV . கட்டிளமைப்பருவம்:
இப்பருவத்தினர்கள் பதின் மூன்று வயது தொடக்கம் பத்தொன்பது வயதிற்குட்பட்ட நிலையினரைக் குறித்தாலும் இருபது வயதிற்கு மேலும் நீடிக்கின்ற சுமார் 23 வயது வரையான காலப்பகுதியையும் உள்ளடக்கும். கட்டிளமைப்பருவத்தின் ஒரு பகுதிதான் பதின் வயதுப்பருவம் ஆகும்.
முதிர்ச்சிக்கும் குழந்தைத் தனத்திற்கும் இடையிலான நிலைமாறும் பருவம் கட்டிளமைப் பருவமாகும் என்பர். இப்பருவத்தை தமிழில் குமர்ப்பருவம், வாலிபப்பருவம், இளந்தாரி, விடலை போன்ற சொற்களால் அழைப்பர். இப்பருவத்தில்தான் ஒரு மனிதனின் எதிர்கால ஆளுமைக்கான விதை ஊன்றப்படுகின்றது.
படிப்படியாக குடும்பத்திலிருந்து விலகுதலும் சுதந்திரமடைதலும் தம் வயதொத்தவர்களுடன் சேர்ந்து உறவுகளை வளர்த்துக் கொள்வதும் செயலாற்றும் திறன்களை விருத்தி செய்தலும் இடம்பெறும். தனித்துவம், சுய அடையாளம் உருவாவது இந்தக் காலப்பகுதியிலேயேயாகும்.
ஒரு குழந்தை பிறந்து 8 வயது வரை பெற்றோர் 100% ஆதிக்கம் செலுத்துகின்றனர். 12வயதாகும் போது அது 80% எனக் குறைந்து, 18வயதாகும் போது வெறும் 20% எனக் குறைகின்றது. மிகுதி 80% இடத்தை நண்பர்களும் ஊடகங்களும் எடுப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தப்பருவத்தில் பாலியல் ரீதியான உணர்வுகள் உருவாக்கம் பெறுவதற்கான வகையில் உடலியல் மற்றும் உளவியல் வளர்ச்சி, விருத்தி மாற்றங்கள் ஏற்படுகின்றமையைக் காண முடியும். அத்தோடு எதிர்ப்பால் கவர்ச்சியைக் கொண்ட பருவமாகவும் காதல் லீலைகளில் கரிசனை கொண்டதாகவும் இப்பருவம் இருக்கும்.
இப்பருவத்தினர்கள் பக்குவமற்றவர்கள். அச்சமும் பயமும் சந்தேகமும் கொண்டவர்கள். ஏற்கனவே பெற்றோர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வாழப்பழகிய இவர்கள் இப்பருவத்தில் கட்டுப்பாடுகளை விரும்பாமல் தங்களது தேவைகளை தாங்களே நிறைவுசெய்ய முனைவர். தனிமையை நாடுவதும் எடுத்ததற்கெல்லாம் கோபமடைவதும் தனது சுய கௌரவத்தின மீது அதீத அக்கறை கொள்கின்றவர்களாகவும் இருப்பர். தமது செயற்பாடுகளில் வெளித் தலையீடுகளை பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். இவைகளால் வீட்டு முரண்பாடுகள் தலைதூக்குவதுமுண்டு.
அத்தோடு சமூக அங்கீகாரம் பெறும் பணிகளைக் கற்றுத் தேறுதல் மாற்றங்களுக்குள்ளான தனது உடலை தேவைக்கேற்றவாறு பயன்படுத்தல், பொருளாதார சுதந்திரம் பெறல், திருமணத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஏற்றவாறு வசதிகளை உருவாக்குதல், பெற்றோரிடமிருந்தும் முதிர்ந்தோரிடமிருந்தும் மனவெழுச்சி சுதந்திரம் பெறல் போன்ற பண்புகளும் இப்பருவத்தினரின் தனிச் சிறப்பம்சமாகும்.
பிள்ளை வளர்ப்பு முறைகள்:
பிள்ளை வளர்ப்பு என்பது ஆரம்பத்தில் ஒரு கலையாகக் கருதப்பட்டாலும் இன்று, அது விஞ்ஞானபூர்வமாக அறிந்து கைக்கொள்ளப்படவேண்டிய ஒரு மகத்தான துறை எனக் குறிப்பிடமுடியும். பொதுவாகக் குழந்தை வளர்ப்பானது மூன்று வகையாக நோக்கப்படுகின்றது.
1. அதிகாரக் குழந்தை வளர்ப்பு:
இந்தக் குழந்தை வளர்ப்பு அதிகாரத்தொனியுடன் அமைவதாகும். அது பொதுவாக செயற்பாடுகளை அதிகாரத்துடன் கட்டுப்படுத்துவதுடன் பிடிக்காத நடவடிக்கைகளுக்குத் தண்டனை வழங்குவதாகவும் அமைந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் இவை அச்சுறுத்தும் பாணியிலானதாக அமைகின்றது.
2. அரவணைப்புக் குழந்தை வளர்ப்பு :
இத்தகைய வளர்ப்பு முறையில் கவனிப்புடன் கூடிய அன்பான அணுகுமுறை அவதானிக்கப்படுகின்றது. விமர்சனங்களை விடுத்து புரிந்துகொள்ளக்கூடிய விதி முறைகளைக் கொண்டதாக இவ்வணுகுமுறை அமையும். குழந்தைகளை அவர்களின் இயல்புடன் ஏற்றுக்கொண்டு ஆதரவாக செயல்படுபவராகப் பெற்றோர் இருப்பர். இதுவே ஆரோக்கிய குழந்தை வளர்ப்பு முறையாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய குழந்தை வளர்ப்பு முறையாகவும் கொள்ளப்படுகின்றது.
3. ஆதரவற்ற குழந்தை வளர்ப்பு:
இங்கு உணர்ச்சி சார்ந்த ஆதரவு இருந்தாலும் புரிந்துகொள்ளக்கூடிய விதிமுறைகள் அற்றிருப்பது பெரும் குறைபாடாகும். இங்கு சரியான கட்டமைப்பு, எதிர்பார்ப்பு அற்ற நிலை காணப்படும். இங்கு குழந்தைகளின் நடத்தைக் கோலங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாத நிலைமை அவதானிக்கப்படுகின்றது. அத்துடன் தண்டனைகளும் ஒருவித சீரற்ற முரண்பாடான முறைகளிலேயே வழங்கப்படுகிறது.
தவறான அணுகுமுறைகளும் ஏற்படும் விளைவுகளும்:
1. பெற்றோரின் தவறான முன்மாதிரி:
பிள்ளை வளர்ப்பில் பெற்றோர்கள் முதலாவது முன்மாதிரி ஆவர். பெற்றோர்களினது பேச்சு, செயல் (நடை,உடை, பாவணை), பழக்க வழக்கங்கள் என்பனவற்றை அச்சொட்டாக பிள்ளையானது பின்பற்ற முனைகின்றது.
பிள்ளையின் சமூக மயமாதல் செயன்முறையில் ஆதிக்கம் செலுத்துகின்ற முதலாவது முகவராக பெற்றோர்களே காணப்படுகின்றனர். அந்தவகையில் ஒரு பிள்ளையானது தவறான நடத்தைகளைக் கொண்டதாக காணப்படுவதற்கு பெற்றோரின் தவறான முன்மாதிரிகளும் வழியமைக்கின்றன. உதாரணமாக ஒரு பிள்ளை கடுமையாக பொய் பேசுவதற்கு அதனது பெற்றோரின் பொய் பேசுகின்ற பழக்கமும் காரணமாய் அமையும்.
2. அன்பு செலுத்துவதில் பாரபட்சம்:
பிள்ளை வளர்ப்பில் அன்பு செலுத்துதல் என்பது நிகரில்லாத குணமாகும். பிள்ளைகளுக்கிடையில் பெற்றோர்கள் தங்களது வாரிசு உடைமைகளை பங்கிட்டு வழங்குவதில் கூட அன்பு ஆதிக்கம் செலுத்தும். அதுமாத்திரமன்றி ஒரு தீன்பண்டத்தை பங்கிட்டுக் கொடுப்பதில் கூட இவ் அன்பானது தாக்கம் செலுத்துகின்றது. பெற்றோர்கள் தங்களிடம் உள்ள பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துவதில் நீதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளை முத்தமிடுவதில் கூட அநீதி இழைக்கப்படக் கூடாது. பிள்ளைகளை ஒப்பிட்டு தாழ்த்தியும் உயர்த்தியும் பேசக் கூடாது. உணவு, உடை வழங்கல் போன்றவற்றில் புறக்கணிப்பு தடைசெய்யப்படல் வேண்டும். அன்பு செலுத்துவதில் ஒரு பிள்ளைக்கு கூடுதலாகவும் மற்றைய பிள்ளைக்கு குறைவாகவும் பாரபட்சம் காட்டும்போது, அப்பிள்ளையானது அடிப்படையில் உளம் பாதிக்கப்பட்டு வன்முறைக் குணம் கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. அத்தோடு பிள்ளைகளுக்கு மிதமிஞ்சிய அன்பைக் காட்டுவது கூட ஆரோக்கியமானதல்ல.
அன்பு செலுத்துவதில் பாதிக்கப்படும் குழந்தைகள் மற்றும் சிறு வயதிலேயே பெற்றோரை இழக்கும் பிள்ளைகள் திறனற்றதாகவும், சுதந்திரமாக இயங்காததாகவும், தன்னம்பிக்கை, மனவுறுதியை இழந்ததாகவும் காணப்படும். அத்தோடு பிறர் இப்பிள்ளையின் மீது அதிக அன்பைக் காட்டி அவர்களது தவறான விருப்பங்களுக்கு ஈடுபடுத்த இவ்வாறான பிள்ளைகளை சுலபமாக இசைவாக்கிக் கொள்வர். அதுமாத்திரமன்றி, பிள்ளைகளுக்கிடையிலான பாரபட்சமானது அப்பிள்ளைகளுக்கிடையே குரோதத்தையும் பொறாமையையும் ஏற்படுத்தி பலி தீர்க்கும் நிலைக்குக் கூட இட்டுச் செல்லும்.
3. கற்பித்தல், வழிகாட்டல் மற்றும் உபதேசித்தலில் முறையற்ற அணுகல்:
பிள்ளைகளுக்கு கற்பிக்கின்ற வழிகாட்டுகின்ற விடயத்தில் பிள்ளைகளது நிலைமைகள், தன்மைகள் அறிந்து பெற்றோர்கள் சினேகபூர்வமாக நடந்து கொள்தல் வேண்டும். அத்தோடு பிள்ளைகள் தொடுக்கின்ற அறிகைசார் கேள்விகளுக்கு தகுந்த முறையில் விடையளிக்கப்படல் வேண்டும். மேலும் கற்றல் விடயத்தில் பிள்ளை கொண்டிருக்க வேண்டிய காத்திரமான இலக்கு பற்றி வழிப்படுத்துவதுடன் பிள்ளைக்கு சுமையை ஏற்படுத்துகின்ற விதத்திலான அணுகுமுறைகள் பின்பற்றப் படக்கூடாது.
அடுத்து பெற்றோர்கள் விரும்பியதொன்றை பிள்ளையில் ஏற்படுத்த வேண்டுமானால் ஏசிக்கொண்டும் நச்சரித்துக்கொண்டும் இருக்காமல் பிள்ளைகள் எதை எவ்வாறு எப்போது செய்ய வேண்டும் என்பதை தெளிவாகவும் முறையாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்விடயத்தில் பெற்றோர்கள் கடைப்பிடிக்கின்ற கடுமையான செயற்பாடுகளினாலும் முறையற்ற அணுகுமுறைகளினாலும் பிள்ளைகள் காலவோட்டத்தில் கல்விசார் விடயங்களில் பிற்போக்கான நிலைமைகளை அடைவதுடன், பாடசாலையை விட்டு இடைவிலகுகின்ற நிலைக்கும் தள்ளப்படுவர்.
4. தவறை சுட்டுக்காட்டும் முறையற்ற முறைமை:
ஒரு பிள்ளையானது தனது அறிகைக்கு உட்பட்ட வகையில் அதற்கு சரியெனத் தோன்றுகின்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அது பெற்றோர் விரும்பாத பெற்றோரின் அவதானத்தில் அது தவறான விடயமாகக் காணப்படலாம்.
இதன்போது பெற்றோர் தனது பிள்ளை அவ்வாறு நடந்து கொண்டமைக்காக பிள்ளையுடன் உடனடியாகக் கடிந்து கொள்ளாது அதற்கான பின்னணிக் காரணங்களை பிள்ளையுடன் கலந்துரையாடி ஆராய்ந்து அவற்றை திருத்துவதற்கான காரியங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
மாறாக முறையற்ற விதத்தில் பிள்ளையுடன் கடுமையாக நடந்துகொள்ள முனைந்தால் பாரிய தவறுகளைப் புரியக்கூடிய நிலைக்கு அப்பிள்ளையை வழிப்படுத்தியதாக அமைந்துவிடும். பின்னர் பெற்றோர்கள் தங்களது அணுகுமுறை தொடர்பில் கவலைப்படவேண்டி நேரிடும்.
5.பிள்ளையின் எதிர்பார்க்கைகளை விருப்பங்களை புரிந்து கொள்ளாமை:
பிள்ளையானது தனக்குரிய பருவங்களில் அதற்கேற்ற எதிர்பார்க்கைகளையும் விருப்பங்களையும் கொண்டிருக்கும். இவற்றில் பெரும்பாலானவற்றை சினேகபூர்மான உறவைக் கடைப்பிடிக்கும் பெற்றோர்களாயின் மனம் விட்டுப் பேசும். சிலவற்றை பேசவோ வெளிப்படுத்தவோ முன்வராது.
ஆனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் அவ்வாறான விருப்பங்களை புரிந்துகொண்டு ஆரோக்கியமான விளைவுகளைத் தருவதாயின் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு முன்னிற்க வேண்டும். ஆனால் தங்களது சக்திக்கப்பாற்பட்ட எதிரான விளைவுகளைத் தரக்கூடிய பிள்ளைகளது எதிர்பார்க்கைகளை முறையாகவும் சினேகபூர்வமாகவும் அணுகி அவர்களுக்கு தங்களது நிலைப்பாட்டையும் இயலாமையையும் ஆரோக்கியமாக எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படாத பட்சத்தில் பிள்ளைகள் விரக்தியடைந்து, நெறிபிறழ்ந்து, நம்பிக்கையிழந்து பெற்றோரின் கட்டுப்பாட்டினை மீறி நடப்பதற்கு முனைவார்கள். இங்கு பிள்ளைகள் கெட்ட சகபாடிகளின் உறவினை ஏற்படுத்திக்கொண்டு பஞ்சமா பாதகச் செயல்களில் ஈடுபடுவர்.
6. பிள்ளைகளுக்கு முன்னால் பிரச்சினைப்படல்:
பல பெற்றோர்கள் தங்களது குடும்பப் பிரச்சினைகள் மற்றும் வீட்டுப் பிரச்சினைகளை எல்லாம் தமது பிள்ளைக்கு முன்னால் எடுத்துக்கொள்வதையே வழக்கமாக்கிக் கொள்வர். இதனால் அப்பிள்ளையானது பல்வேறு வகையிலும் பாதிப்படைவதை குறிப்பாக பிள்ளையின் மனம் பாதிப்படைந்து அதனது ஆளுமையில் நேரெதிரான விளைவினை ஏற்படுத்துவதனைப்பற்றி சற்றும் பொருட்படுத்துவதில்லை. இது ஒரு துன்பகரமான நிலைமையாகும்.
இதனைத் தவிர்த்து பிள்ளை வாழுகின்ற சூழலை சந்தோசமானதாகவும் கலகலப்பானதாகவும் வைத்துக்கொள்ள ஒழுங்குகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
7. அதிகரித்த சுதந்திரம் வழங்கல்:
பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விதிக்காமல் அவர்கள் விரும்பியவாறு அவர்களை செயற்படுவதற்கான அங்கீகாரத்தை வழங்குகின்றனர். அதற்காக அவர்களுக்கு வீட்டில் தனி அறையும் ஏனைய வசதிகளும் செய்தும் கொடுப்பர். குறிப்பாக இவ்விடயமானது ஒரு குழந்தையின் பிள்ளைப்பருவத்திலிருந்து வழங்கப்படுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தை பிள்ளையானது நன்றாகப் பயன்படுத்தி கெட்ட சகபாடிகளது உறவை வளர்த்துக் கொள்வதுடன் இன்றைய நவீன உலகில் ஆதிக்கம் செலுத்துகின்ற தகவல் தொழில் நுட்பத்தின் விளைவுகளான கையடக்கத் தொலைபேசி மற்றும் இன்ரநெட் மூலமான வசதிகள் ஊடாக தவறான காரியங்களில் ஈடுபட்டு தன்னையே அழித்துக்கொள்ளும் நிலைமைக்கு செல்கின்றர். இது முறையாகப் பெற்றோரால் வழிப்படுத்தப்படல் வேண்டும்.
எனவே பிள்ளை வளர்ப்பானது பெற்றோர்களால் மேற்போன்ற தவறான அணுகுமுறைகள் களையப்பட்டு முறையாகக் கைக்கொள்ளப்படும் போதுதான் அது சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாகி அதன் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்வதுடன் சமூகத்தில் ஆரோக்கியமான பரம்பரை ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ந்தேர்ச்சியான செயன்முறையில் அதுவும் ஒரு பங்காளியாக தான் தனது வளர்ப்பில் பெற்றோர் மூலமாகப் பெற்ற அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தும். இதனை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் தனது பிள்ளைக்கு காத்திரமான வழிகாட்டல்கள் மற்றும் அணுகுமுறைகள் மூலமாக வளர்ப்பதற்கான நடவடிக்கையில் கரிசனை செலுத்துதல் வேண்டும்.
உசாத்துணை:
1. தயா சோமசுந்தரம், சா.சிவயோகன் (2004) 'தமிழ் சமுதாயத்தில் உளநலம்' சாந்தியகம் யாழ்ப்பாணம்.
11. எஸ்.சிவதாஸ்(2014) 'குழந்தை வளர்ப்பு' மனநல சங்கம் வவுனியா.
111. றவூப் ஸெய்ன்(2013) 'கட்டிளமைப்பருவம்' சி.டி.எஸ் திஹாரிய்ய.