யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வைரவிழா
1957-2017
யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வைரவிழா 17-01-2017 அன்று , பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் , மாணவர்கள், அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் ஒன்றிணைவுடன் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது ..
அதிபர் திரு.வீ.இந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இவர்களுடன் பல பிரமுகர்களும், கடந்தகாலத்தில் பாடசாலையின் வளர்ச்சியில் துணை நின்ற பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களுடன் , பழைய மாணவர்களான பேராசிரியர். திருமதி. அம்மன்கிளி முருகதாஸ், மொழியியற்துறை கிழக்கு பல்கலைக்கழகம், திரு. சிற்றம்பலம் புஸ்பலிங்கம், வடமராட்சி வலய கல்விப்பணிப்பாளர் , திரு.சிவப்பிரகாசம் ஸ்ரீ பாஸ்கரன், செயலாளர் பிரதேச சபை பருத்தித்துறை, ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்கள்,மாணவ மாணவிகள் அணிவகுத்து நிற்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் இருந்து அழைத்து வரப்பட்டனர்.
இறைவணக்கத்தை தொடர்ந்து பாடசாலை வாயில் அமைக்கப்பட்ட புதிய சரஸ்வதி சிலை பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி.சிவராசா ஸ்ரீ வடிவாம்பிகை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து "பாலாவி" வைரவிழா சிறப்புமலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், இதுவரை காலம் பாடசாலை வளர்ச்சிக்கு உழைத்த அதிபர்கள், ஆசிரிய பெருந்தகைகள், மற்றும் பல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த நலன்விரும்பிகளும், எமது பாலாவி அமைப்பும் மேடைக்கு அழைத்து கெளரவிக்கப்பட்டதுடன் , வைர விழா சிறப்பு நினைவு சின்னங்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சிறப்பு சித்தி பெற்ற மாணவ மாணவிகள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.